நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதர்!

நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதர்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் தற்போது பக்திப் பெருக்கோடு கூடிய மக்கள் வெள்ளம் ஒவ்வொரு நாளும் காஞ்சிபுரத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்திவரதர் தரிசன திருவிழாவாகும். தம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு மனிதரும் ஒரு முறையாவது அத்திவரதரை பக்தியோடு சென்று தரிசித்தால் பெரும் பாக்கியம் கிட்டிடும் என்பதும் அவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைப்பது நிச்சயம் என்பதும் ஐதீகம். 
 
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அனந்தசரஸ் புஸ்கரணி குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி 48 நாட்களுக்கு பக்தர் களுக்கு அருள் புரியும் நிகழ்வானது இவ்வருடம் கடந்த ஜுலை 01-ம் தேதி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்பாக 1979-ம் ஆண்டு 02-ம் தேதி எழுந்தருளிய அத்திவரதர் இந்த ஆண்டு ஜுலை 01-ம் தேதி 40 ஆண்டு களுக்கு பின்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இவரின் திருமேனி அத்தி மரத்தாலான காரணத்தினால் அத்திவரதர் என்று எல்லோரும் அழைக்கின்றார்கள். இவர் முதலாம் யுகத்தில் தோன்றினார் என்று ஆன்மீக அன்பர்களால் போற்றப்படுகின்றது. 
 
காஞ்சிமா நகரத்தின் பல்வேறு சிறப்புக்களில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீவரதராஜர் பெருமாள் ஆலயமாகும். இந்த திருத்தலம் திருகச்சி, அத்தி கிரி என்ற பெயர்களுடன் பெருமையுடன் அழைக் கப்பட்டு வருகின்றது. இத்தலத்தின் மூலவராக வரதராஜ பெருமாளும், தாயாராக பெருந்தேவி அன்னையும் அருள் புரிகின்றார்கள். பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம் இந்த வரதர் மறுக் காமல் வழங்கி வருவதால் இவரை பக்தர்கள் வரதர் என்று அன்போடு அழைக்கின்றார்கள். இந்த ஆலயத்தில் நாம் வழிபடும் வரதராஜ பெரு மாள் ஆதிமூலவர் கிடையாது. இந்த தலத்தின் மூலவர் அத்திவரதரேயாகும். இவர் அனந்தசரஸ் என்ற கோயில் தீர்த்தக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் வெள்ளி பேழையில் சயன கோலத்தில் உள்ளார். 
 
அத்திவரதர் கோயில் குளத்தில் மூழ்கியிருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஒரு முறை சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று தேவர்கள் அனைவருக்கும் பெருமாள் காட்சி தந்தார். அந்த காட்சியை கண்ட பிரம்மதேவன் பெருமாளின் திருவடிவத்தை மிகப் பெரிய அத்தி மரத்தை கொண்டு வடிவமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவ்வாறு பிரம்ம தேவன் வழிபட்ட மூர்த்தம் தான் அத்திவரதர். இந்த அத்திவரதரை இந்திரனின் தேவலோக யானையான ஐராவதம் சுமந்து வந்து மண்ணுலகில் நிலைநிறுத்தி சென்றதால், அத்திகிரி, வேழகிரி என்ற பெயரில் இந்த இடம் குன்றாகி போனது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானிகளுக்கும் தேவர் களுக்கும் வேண்டிய வரங்களை அப்படியே அளித்தார். 
 
பிரம்மதேவன் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கர, கதை மற்றும் தாமரையுடன் நான்கு கைகள் கொண்ட உருவில் காண விரும்பி கடும் தவத்தை மேற்கொண்டார். இதன் பயனாய் திருப்தியடைந்த பகவான் நாராயணர் அவருக்காக ஒரு புஷ் கரணியின் வடிவில் தோன்றினார். இருந்த போதிலும் பிரம்மா அந்த தரிசனத்தோடு திருப்தியடையவில்லை. தனது தவத்தை மேலும் மேற்கொண்டு காஞ்சியில் அஸ்வமேத யாகம் ஒன்றையும் மேற்கொண்டார். யாகத்தில் பிரம்மா வின் விருப்பத்தின்படி பகவான் நாராயணர் நான்கு கரத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாளாக காட்சியளித்தார். பெருமாளின் இந்த கருணையை எண்ணி நெகிழ்ந்து போன பிரம்மாவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரை வணங்கி விரும்பிய வரத்தை பெற்று மகிழ்ந்தார்கள். வற்றாத வரங்களை வழங்கி வருவதால் இந்த பெருமாள் “வரதர்” என்னும் திருநாமத்தால் அறியப்படுகின்றார். 
 
காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தின் குளத் திற்கு அடியில் இருக்கும் அத்திவரதரை தரிசிக்க 24 படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். அதே போல் ஆலயத்தின் மூலவரான வரதராஜபெருமாளை தரிசிக்க 24 படிகள் மேலே சென்றால் தான் தரிசிக்க முடியும். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தரிசன திருவிழாவில் முதல் 30 நாட்கள் பெருமாள் அனந்தசயன நிலையிலும், கடைசி பத்து நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருகின்றார். தமிழ்நாடெங்கும் மழையின்றி கோடை காலத்தில் எங்கும் உள்ள குளங்களில் நீர் வற்றி போயிருந்த நிலையிலும் காஞ்சி வரத ராஜபெருமாள் அனந்தசரஸ் புஸ்கரணியில் மட்டும் நீர் வற்றாமல் இருந்து வந்தது அந்த பெருமாள் செய்வித்த அதிசயமேயாகும். 
 
இதற்கு முன்பாக கடந்த 18.08.1854, 13.06.1892, 12.07.1937 மற்றும் 02.07.1979 ஆகிய தேதிகளில் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் அத்திவரதர் தரிசன உற்சவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு பின்பாக தற்போது 2019-ம் வருடம் ஜுலை 01-ம் தேதி முதல் தரிசன விழா நடைபெற்று வருகிறது, வருகின்ற ஜுலை 16- ஆம் தேதி வரை பக்தர்கள் அத்திவரதரை காஞ்சியில் தரிசனம் செய்ய இயலும். 
 
A.A. ராமன்
 
A.A. ராமன்